அ.ம.மு.க.வின் தாய்க்கழகமான அ.தி.மு.க.வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க.வின் தாய்க்கழகமான தி.மு.க.வில் இணைந்திருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட பின் அவரிடம் எடுத்த பேட்டி...
ஓ.பி.எஸ்.ஸின் எதிர்ப்பால்தான் அ.தி.மு.க.வுக்குப் போகாமல், தி.மு.க.வில் இணைந்திருக்கிறீர்களா?
ஒற்றைத் தலைமையில் இருக்கிற கட்சிதான் செயல்பட முடியும். அப்படி செயல்பட்டதன் காரணமாகத்தான் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. அ.தி.மு.க.வில் அம்மா இறந்த பிறகு பல்வேறு நிலைப்பாடுகளில் முட்டிமோதி நின்று கொண்டிருக்கிறார்கள். எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாத நிலையில் அந்தக் கட்சி இருக்கிறது. பா.ஜ.க.வால் இயக்கப்படும் அ.தி.மு.க.வில் தன்மானத்தை இழந்துவிட்டு போய்ச்சேர விரும்பவில்லை.
கடந்த காலங்களில் ஸ்டாலினைக் கடுமையாக விமர்சித்த நீங்களே அவரின் தலைமையை ஏற்றுக்கொண்டதாக சொல் கிறீர்களே?
இரண்டு விஷயங்களில் அண்ணன் ஸ்டாலினை நான் பாராட்டுகிறேன். ஒன்று, கலைஞர் மறைந்த பிறகு ஒரே இரவில் உயர்நீதிமன்றம் சென்று வழக்காடி, கடற்கரையில் இடம் வாங்கிய துணிச்ச லுக்காகவே அவரைப் பாராட்ட வேண்டும். இரண்டு, ஆர்.கே.நகரில் தோற்றாலும்கூட தமிழகத்தில் தி.மு.க.தான் தலைமை தாங்கும், மக்கள் உரிமைக்காக போராடும் எனச்சொல்லி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதற்காகவே தி.மு.க.வில் நான் இணைந்தேன். அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்களுக்கெல்லாம் விரோத மனப்பான்மை இல்லாமல், தி.மு.க.வில் நல்லதுதானே செய்திருக்கிறார்கள். “"மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு' என்றார் பேரறிஞர் அண்ணா. அதைக் கடைப்பிடிக்கும் தலைவர் ஸ்டாலின் என்பதை ஏற்றுக்கொண்டேன் நான்.
உங்களுக்கு என்ன மாதிரியான பதவி கொடுப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?
பதவி என்பது கேட்டுப் பெறுவதல்ல. என் உழைப்பைக் கண்டு தலைமை எனக்கு பதவி வழங்கும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
அ.ம.மு.க.வில் இருந்து வேறு சிலர் தி.மு.க.வில் இணைவார்களா?
முதலில் நான் மட்டும்தான் இணைவதாக இருந்தது. இந்தத் தகவலைக் கேட்டு மேலும் சில நிர்வாகிகள் வந்தார்கள். அதனால், தளபதியைக் கூட்டிக்கொண்டு ஆண்டிப்பட்டியில் கூட்டத் தைக் கூட்டி, ஏற்பாடு செய்யவேண்டும். அதற்கு கொஞ்சம் நேரம் வேண்டும்.
உங்களைப் போன்ற தலைமைக் கழக நிர்வாகிகள் வருவார்களா? அல்லது அ.ம.மு.க. தாய்க்கழகத்தில் இணைந்துவிடுமா?
நிறையபேர் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. வந்துகொண்டிருக்கிறார்கள்; வருவார்கள்.
-மதி